கனடா டி20 லீக் தொடரில் ஊதியம் வழங்கப்படாததால் வீரர்கள் ஆட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கனடா டி20 லீக் தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் மாண்ட்ரீயல் டைகர்ஸ்  அணியும் மோதின. 

இந்த போட்டி குறித்த நேரத்தில் தொடங்கப்படவில்லை. இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதற்கு என்ன காரணம் என்று இந்த தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சியோ அல்லது போட்டியை நடத்தும் நிர்வாகம் சார்பாகவோ உண்மையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

வீரர்களுக்கு ஊதியம் வழங்காததால் அவர்கள், விடுதியில் இருந்து மைதானத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற மறுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் அதனால்தான் போட்டி தாமதமாக தொடங்கியதாகவும் ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ தெரிவித்துள்ளது. டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங். இரு அணி வீரர்களுமே எதிர்ப்பு தெரிவித்து ஆட மறுத்துள்ளனர். 

தொடர் தொடங்குவதற்கு முன்பாக 15% ஊதியத்தையும் முதல் சுற்று முடிந்ததும் 75% ஊதியத்தையும் வழங்க வேண்டும். ஆனால் வீரர்களுக்கு எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் தான் வீரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக இப்படி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பின்னர் தாமதமாக நடந்த போட்டியில் மாண்ட்ரீயல் டைகர்ஸ் அணியை வீழ்த்தி டொரண்டோ நேஷனல்ஸ் அணி வெற்றி பெற்றது.