எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான சரன்தீப் சிங், ஜதின் பாரஞ்பே, ககன் கோடா, தேவாங் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்திய அணியின் சிக்கலாக இருக்கும் இடங்களுக்கு தீர்வு காணும் விதமாக பரிசோதிக்கப்படும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அதற்காகவே பல முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்தனர். 

அதுமட்டுமல்லாமல் தேர்வுக்குழு தன்னிச்சையாக செயல்படுவதில்லை என்றும் தேர்வாளர்களாக இருப்பவர்களே சர்வதேச கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்றும் விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக உலக கோப்பை அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

தற்போதைய தேர்வாளர்கள், அந்த பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் என்று கடுமையாக சாடியிருந்தார் முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர். தேர்வாளர்களில் ஒருவர், உலக கோப்பை போட்டியின்போது விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு, அவரே டீ கொண்டு சென்று கொடுத்ததாக ஃபரோக் கூறியிருந்தார். 

இவ்வாறு எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு ஏற்கனவே வசமா வாங்கிக்கட்டி கொண்டிருக்கும் நிலையில், யுவராஜ் சிங்கும் தன் பங்கிற்கு காய்ச்சி எடுத்துள்ளார். இந்திய அணி தேர்வாளர்கள் குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், கண்டிப்பாக இப்போது இருப்பவர்களை விட சிறந்த தேர்வாளர்கள் தேவை. அணி தேர்வாளர்களின் பணி எளிதானதல்ல. 15 வீரர்களை அவர்கள் தேர்வு செய்யும்போது, மற்ற சிறந்த 15 வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி வரத்தான் செய்யும். எனவே அது மிகவும் கடினமான பணி. தற்போதைய இந்திய அணி தேர்வாளர்கள் மாடர்ன் டே கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு சிந்திக்கவில்லை என்பது எனது கருத்து. 

பொதுவாகவே, அணியில் ஆடும் வீரர்களுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருப்பதே எனது இயல்பு. அதனடிப்படையில் சொல்கிறேன்.. அணியை பற்றியோ வீரர்களை பற்றியோ எதிர்மறையாக பேசவே கூடாது. அது அணிக்கு நல்லதல்ல. எப்போது அணி சரியாக ஆடவில்லையோ, அதை எதிர்கொள்ளும் விதம்தான் கேரக்டரை வெளிப்படுத்தும். வீரர்கள் சரியாக ஆடாதபோது ஆதரவாக இருந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால், மோசமான தருணங்களில் எல்லாருமே நம்பிக்கையிழந்து மோசமாக பேசுகின்றனர். எனவேதான் கண்டிப்பாக இப்போதிருப்பதை விட சிறந்த தேர்வாளர்கள் தேவை என்று சொல்கிறேன் என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.