இக்கட்டான பல சூழல்களில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து வெளிநாடுகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், ஓய்விற்கு பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்காகவே உழைத்து வருகிறார். 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக அவர் அளப்பரிய பணியாற்றி கொண்டிருக்கிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், பல இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார். 

பிரித்வி ஷா, ஷுப்மன் கில், பிரியங்க் பஞ்சால், நாகர்கோடி உள்ளிட்ட பல திறமைகளை உருவாக்கி கொடுத்துள்ளதோடு, ராகுல், விஜய் சங்கர், மயன்க் அகர்வால் உள்ளிட்ட பல வீரர்களை மெருகேற்றி இந்திய அணிக்கு அளித்துள்ளார். 

இளம் வீரர்களை உருவாக்கும் பணியை அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக ராகுல் டிராவிட் அபாரமாக செய்துகொண்டிருக்கிறார். இந்திய அணி எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்பது இப்போதே தெரிகிறது. அதற்கு ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம்.

அதேபோலவே பாகிஸ்தான் அணியும் மிகச்சிறந்த வீரர்களை வளர்த்தெடுக்க திட்டமிட்டு, அதற்காக அண்டர் 19 அணிக்கு சிறந்த முன்னாள் வீரர் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க பரிசீலித்துவருகிறது. அந்த வீரர் பெரும்பாலும் யூனிஸ் கானாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

2000ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமான யூனிஸ் கான், 118 டெஸ்ட் போட்டிகளிலும் 265 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றிய அனுபவம் கொண்டவர் யூனிஸ் கான். பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்த யூனிஸ் கானே, அவர் ஆடிய காலத்தில், பேட்டிங் ஆலோசனைகளை ராகுல் டிராவிட்டிடமிருந்து பெற்றுள்ளார். 

ராகுல் டிராவிட்டிடம் பேட்டிங் ஆலோசனைகளை பெற்றது குறித்து அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். 2004ம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்துகொண்டிருந்தபோது, டிராவிட்டை தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டேன். நான் ஒரு ஜூனியர். அவர் சீனியராக இருந்தாலும் எனது அறைக்கே வந்து எனக்கு ஆலோசனைகளை வழங்கினார். அவரது ஆலோசனைகள் எனக்கு பயனுள்ள வகையில் இருந்தன. எனது பேட்டிங்கை மேம்படுத்திக்கொள்ள உதவின என்று யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.