கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், ஜூலை 8ம்  தேதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு அடுத்து, இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு இன்று புறப்பட்டது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் தான் நடக்கிறது என்றபோதிலும், கொரோனா அச்சுறுத்தலால், பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிப்பதற்கான கால அவகாசம் தேவை என்பதால், இப்போதே பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டுவிட்டனர். 

இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள யூனிஸ் கான், இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்தும் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்தும் பேசியுள்ளார். 

“ஆர்ச்சர் உண்மையான மேட்ச் வின்னர் மற்றும் அச்சுறுத்தலும் கூட. ஆர்ச்சர் மிகச்சிறந்த பவுலர். உலக கோப்பை இறுதி போட்டியின் சூப்பர் ஓவரை அருமையாக வீசினார். அவரது பவுலிங் ஆக்‌ஷன் மிகச்சிறப்பு; மிரட்டலான வேகத்தில் வீசக்கூடியவர். சிறந்த பவுலர் என்ற பிம்பத்தினாலும், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதும், ஆர்ச்சர் மீதான கூடுதல் அழுத்தங்கள். அதனால் அவருக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். அவரது இன்ஸ்விங்கில் அவுட்டாகிவிடாமல் தப்பிப்பதற்கான ஆலோசனைகளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கியிருக்கிறேன் என்று யூனிஸ் கான் தெரிவித்தார். 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக உருவெடுத்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிரட்டலாக வீசினார். குறிப்பாக இவரது பவுன்ஸரில் இருந்து பேட்ஸ்மேன்கள் தங்களை காத்துக்கொள்வது அவசியம். அதுவும் இங்கிலாந்து கண்டிஷனில் ஆர்ச்சர் மேலும் மிரட்டலாக வீசக்கூடியவர். எனவே ஆர்ச்சரை சமாளிப்பதற்கு பாகிஸ்தான் அணி பிரத்யேக திட்டங்களை வகுக்கும்.