அபுதாபியில் நடந்துவரும் அபுதாபி டி10 லீக் தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். இயன் மோர்கன், கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட பல வீரர்கள் இந்த தொடரில் ஆடுகின்றனர். 

டி10 லீக்கில் கிறிஸ் லின் அபாரமாக ஆடிவருகிறார். இந்த தொடரில் அவரளவுக்கு வேறு யாரும் ஆடவில்லை. அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் நார்தர்ன் வாரியர்ஸ் அணியில் ஆடிவருகிறார். பெங்கால் டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரசலை, ஸ்பின் பவுலர் ஒருவர் கீழே சாய்த்துவிட்டார். 

பெங்கால் டைகர்ஸ் - நார்தர்ன் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டைகர்ஸ் அணி 10 ஓவரில் 102 ரன்கள் அடித்தது. 103 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வாரியர்ஸ் அணி 10 ஓவரில் 96 ரன்கள் அடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இந்த போட்டியில் 103 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வாரியர்ஸ் அணியின் வீரர் ரசல், மூன்றாம் வரிசையில் இறங்கி 25 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். ஆனால் அவர் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கவில்லை. இந்த போட்டியில், டைகர்ஸ் அணியில் ஆடிய இளம் ஆஃப்கான் லெக் ஸ்பின்னர் காய்ஸ் அகமது, ஆண்ட்ரே ரசலை பவுன்ஸரில் சாய்த்தார். 

ஃபாஸ்ட் பவுலர்கள் தான் பவுன்ஸர் வீசுவார்கள். ஆனால் லெக் ஸ்பின்னரான காய்ஸ் அகமது, ரசல் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் அவருக்கு பவுன்ஸர் வீசி அதிர்ச்சியளித்தார். அதை எதிர்பார்த்திராத ரசல், அந்த பந்தை அடிக்காமல் விடும் முயற்சியில் பேலன்ஸ் மிஸ்ஸாகி கீழே விழுந்தார். அதிரடி வீரரான ரசல், ஸ்பின் பவுலிங்கை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கமாட்டார். அவருக்கு ஸ்பின்னிலயே பவுன்ஸர் வீசி மிரட்டிவிட்டார் காய்ஸ் அகமது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.