இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 4 கேட்ச்களை தவற விட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மோசமான சாதனை படைத்துள்ளார்.
India vs England First Test: Yashasvi Jaiswal Dropped 4 Catches: லீட்ஸின் ஹெடிங்லியில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் நான்கு கேட்சுகளை தவற விட்டார். முதல் இன்னிங்சில் மூன்று கேட்ச்களை தவற விட்ட ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட்டின் மற்றொரு கேட்சை கோட்டை விட்டார்.
முக்கியமான கேட்ச்சை விட்ட ஜெய்ஸ்வால்
அதாவது 97 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த பென் டக்கெட் முகமது சிராஜ் பந்தில் புல் ஷாட் ஆடியபோது அது ஜெய்ஸ்வாலின் கைகளை நோக்கி சென்றது. ஆனால் அந்த கேட்ச்சை ஜெய்ஸ்வால் விட்டு விட்டார். இதனால் ஆவேசமாக கத்திய சிராஜ் தனது கோபத்தை மிகக் கடுமையாக வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சிலும் பென் டெக்கெட், ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஜெய்ஸ்வால் தவற விட்டார்.
4 கேட்ச்களை கோட்டை விட்ட ஜெய்ஸ்வால்
ஒரு டெஸ்ட்டில் 4 கேட்ச்களை விட்டதன் மூலம் ஜெய்ஸ்வால் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை தவற விட்ட முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அவர் பெற்றுள்ளார். தனது 19வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெய்ஸ்வால் முதல் 17 டெஸ்ட்களில் ஒரே ஒரு கேட்ச் மட்டுமே தவற விட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் கண்டனம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்காவது கேட்சை தவறவிட்ட பிறகு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரின் கவனக்குறைவான பீல்டிங் மற்றும் போட்டியில் கவனம் செலுத்தாததற்காக தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். பலர் தங்கள் எக்ஸ் தளத்தில் சதத்துக்கு முன்பு பென் டக்கெட்டின் முக்கியமான கேட்சை தவறவிட்டதற்காக அவரை கடுமையாக விமர்சித்தனர். ''கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெடில் கேட்ச் என்பது முக்கியமான விஷயமாகும். பிளாட் பிட்ச்களில் எப்போதாவது ஒரு முறை தான் வாய்ப்புகள் வரும். அந்த வாய்ப்புகளையும் தவற விட்டால் போட்டியை விட்டு அந்த அணி அதிக தூரம் சென்று விடும். ஆகவே ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று பலரும் தெரிவித்தனர்.
அணியில் எடுக்கக் கூடாது
ஜெய்ஸ்வால் நன்றாக பேட்டிங் விளையாடி இருக்கலாம். ஆனால் சர்வதேச மட்டத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஜெய்ஸ்வால் விட்ட அந்த 4 கேட்ச்களும் இந்தியாவை போட்டியை தோற்கும் அளவுக்கு கொண்டு சென்றது. ஆகவே 2வது டெஸ்ட்டில் ஜெய்ஸ்வாலை இந்திய அணியில் எடுக்கக் கூடாது'' என்று சிலர் கூறியுள்ளனர்.
5வது நாளில் இங்கிலாந்து சிறப்பான ஆட்டம்
இதற்கிடையே முதல் டெஸ்ட்டில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். முதலில் நிதானம் காட்டிய இவர்கள் பின்பு அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.
பென் டக்கெட் சூப்பர் சதம்
குறிப்பாக பென் டெக்கெட் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா என அனைவரது பந்துகளிலும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். ஜடேஜாவின் ஓவரில் ரிவர்ஸ் ஸ்விப்கள் மூலம் பல பவுண்டரிகளை ஓட விட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் சூப்பர் சதம் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய க்ரோலி அரை சதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த இந்திய பவுலர்கள் போராட வேண்டியதிருந்தது.
ஒரே ஓவரில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 188 ரன்கள் சேர்த்த நிலையில், 65 ரன்கள் எடுத்திருந்த க்ரோலி பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்ச் ஆனார். பின்பு வந்த ஆலிப் போப்பும் (8 ரன்) பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார். இதன்பிறகு ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்து போட்டியை பரபரப்பாக்கினார். அதாவது அதிரடி சதம் விளாசிய பென் டெக்கெட் 170 பந்துகளில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தில் மாற்று வீரர் நிதிஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனார்.
இந்திய அணி வெற்றி பெறுமா?
அதற்கு அடுத்த பந்தில் ஹாரி ப்ரூக்கும் (0) பண்ட்டிடம் கேட்சாகி நடையை கட்டினார். அப்போது இங்கிலாந்த் அணி 253/4 என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு ஜோ ரூட்டும், கேப்டன் பென் ஸ்டோக்சும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இப்போதைய நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி இன்னும் 102 ரன்கள் தேவையாக உள்ளது.
