இந்திய அணியின் அனுபவமான விக்கெட் கீப்பர் சஹா. ஆனால் அவர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் புறக்கணிக்கப்படுகிறார். இந்திய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கிற்கு விக்கெட் கீப்பிங் செய்வதற்கு சிறந்த விக்கெட் கீப்பர் தேவை. அதனால் ரிஷப் பண்ட்டை விட பன்மடங்கு விக்கெட் கீப்பிங் திறமையும் அனுபவமும் வாய்ந்த ரிதிமான் சஹா, இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்படுகிறார். 

ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு பெரிதாக சாதகமாக இருக்காது என்பதாலும் வெளிநாடுகளில் விக்கெட் கீப்பிங்கை விட நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய ஒருவர் தேவை என்கிற வகையிலும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுகிறார். 

ரிதிமான் சஹாவை விட ரிஷப் பண்ட் நல்ல பேட்ஸ்மேன் என்பதாலேயே வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ஆடவைக்கப்படுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பண்ட் தான் ஆடினார். சஹாவை விட நல்ல பேட்ஸ்மேன் என்பதற்காக அவர் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் நியூசிலாந்தில் படுமோசமாக பேட்டிங் ஆடினார். ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடவில்லை. இந்திய அணியும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

இதையடுத்து ரிதிமான் சஹாவை டெஸ்ட் அணியில் எடுக்காமல் ரிஷப் பண்ட்டை எடுத்ததை, முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை விட விக்கெட் கீப்பிங்கிற்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே சஹாவைத்தான் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். 

ரஞ்சி இறுதி போட்டியில் பெங்கால் அணியில் ஆடிய ரிதிமான் சஹா சிறப்பாக ஆடி 64 ரன்கள் அடித்தார். ஆனால் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணியைவிட 44 ரன்கள் குறைவாக அடித்ததால், பெங்கால் அணி கோப்பையை இழந்தது. 

இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து சஹா புறக்கணிக்கப்படுவது குறித்து, அவர் ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில், அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

Also Read - ஆஸ்திரேலியாவின் ஆணவத்தையும், ஸ்டீவ் வாகின் திமிரையும் அடக்கிய இந்தியா.. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான தினம்

அதற்கு பதிலளித்து பேசிய ரிதிமான் சஹா, இந்தியாவில் மட்டும்தான் நான் விக்கெட் கீப்பர்; வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் ரிஷப் பண்ட் தான் ஆடுவார் என்பது குறித்து என்னிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் என்னை பொறுத்தமட்டில் தனிப்பட்ட ஒரு வீரருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை விட, அணியின் நலன் தான் முக்கியம். அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம். எனவே ரிஷப் பண்ட்டை ஆட வைக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் முடிவெடுத்தால், அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று சஹா தெரிவித்துள்ளார்.