சஹா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிவந்த நிலையில், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போது காயமடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானாலும், அவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் சதமடித்து தனது இடத்தை தக்கவைத்தார். 

ஆனால் அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பினார். இதையடுத்து ரிதிமான் சஹாவை டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அதுமட்டுமல்லாமல் இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால் தரமான விக்கெட் கீப்பர் தேவை என்பதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிதிமான் சஹா தான் விக்கெட் கீப்பராக ஆடிவருகிறார். 

முதல் போட்டியில் விக்கெட் கீப்பிங்கும் நன்றாக செய்தார். பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி கொஞ்ச ரன்களை சேர்த்து கொடுத்தார். இரண்டாவது போட்டியிலும் நன்றாகவே விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார். விக்கெட் கீப்பிங்கை பொறுத்தமட்டில் சஹாவை குறை சொல்லவே முடியாது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல, முதல் போட்டியில் டீன் எல்கரின் கேட்ச் ஒன்றை விட்டார். அதை பயன்படுத்தி எல்கர் பெரிய இன்னிங்ஸ் ஆடினார். ஆனால் அதுமட்டுமே சஹா செய்த தவறு. அந்த போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டதால் அது பெரிய பாதிப்பாக அமையவில்லை. மற்றபடி அதைத்தவிர விக்கெட் கீப்பிங் சிறப்பாகவே செய்துவருகிறார். 

புனேவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டு அபாரமான கேட்ச்களை பிடித்து அசத்தினார் சஹா. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 275 ரன்களை மட்டுமே அடித்து, ஃபாலோ ஆன் பெற்றதால் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும், நான்காம் நாளான இன்றைய ஆட்ட டி பிரேக்கிற்கு முன்பாகவே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. 

இரண்டாவது இன்னிங்ஸில் இன்று காலை ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணி விக்கெட் வேட்டையை தொடங்கிவிட்டது. உமேஷ் யாதவ் லெக் திசையில் வீசிய பந்தை டி ப்ருய்ன் பின்பக்கம் பவுண்டரிக்கு தட்டிவிடும் நோக்கில் அதை அடிக்க, விக்கெட் கீப்பர் சஹா அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் அந்த கேட்ச்சை பிடித்து மிரட்டினார். அந்த கேட்ச்சின் வீடியோ இதோ..

இதையடுத்து முக்கியமான விக்கெட்டான தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸின் கேட்ச்சை கிட்டத்தட்ட தவறவிட்டுவிட்ட சஹா, சுதாரிப்பாக கடைசிநேரத்தில் டைவ் அடித்து பிடித்துவிட்டார். அஷ்வின் வீசிய பந்து டுப்ளெசிஸின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல, அதை தவறவிட்ட சஹா, அதை பிடிக்க மேற்கொண்ட முயற்சியில் இரண்டு முறை பந்தை தட்ட, அது அவரிடம் இருந்து விலகிச்சென்றது. ஆனாலும் அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற உறுதியில் இருந்த சஹா, கடைசி நொடியில் டைவ் அடித்து அந்த பந்தை பிடித்துவிட்டார். அந்த வீடியோ இதோ..