மகளிர் ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணியில் இருந்தும், டெல்லி அணியில் இருந்தும் முக்கிய வீராங்கனைகள் விலகியுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார் ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மகளிர் ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ளனர் என்று பிசிசிஐ ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. WPL 2026 ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் எல்லிஸ் பெர்ரி தக்கவைக்கப்பட்டிருந்தார். இதேபோல் சதர்லேண்டை டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் விடுவிக்கவில்லை.
எல்லிஸ் பெர்ரி, சதர்லேண்ட் விலகல்
WPL 2026-ல் இருந்து பெர்ரி விலகியதால், அவருக்குப் பதிலாக சயாலி சத்கரேவை RCB அறிவித்துள்ளது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணியில் சத்கரே ரூ.30 லட்சம் என்ற அடிப்படை விலையில் இணைவார். மறுபுறம், சதர்லேண்டிற்குப் பதிலாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங்கை DC அணி சேர்த்துள்ளது. கடந்த சீசனில் UP வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய கிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான அணியில் ரூ.60 லட்சம் என்ற அடிப்படை விலையில் இணைவார்.
பெர்ரிக்கு பதிலாக சயாலி சத்கரே
"ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர்களான எல்லிஸ் பெர்ரி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) மற்றும் அனபெல் சதர்லேண்ட் (டெல்லி கேப்பிடல்ஸ்) ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக வரவிருக்கும் லீக் பதிப்பிலிருந்து விலகியுள்ளனர். பெர்ரிக்கு பதிலாக சயாலி சத்கரேவை RCB அறிவித்துள்ளது. சத்கரே ரூ.30 லட்சம் என்ற அடிப்படை விலையில் RCB-ல் இணைவார்' என்று பிசிஐஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
சதர்லேண்டிற்குப் பதிலாக அலனா கிங்
"சதர்லேண்டிற்குப் பதிலாக அலனா கிங்கை DC அறிவித்துள்ளது. கடந்த சீசனில் UP வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய இந்த ஆஸ்திரேலிய லெக்-ஸ்பின்னர், 27 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிங் ரூ.60 லட்சம் என்ற அடிப்படை விலையில் DC-ல் இணைவார்'' என்று பிசிசிஐ அறிக்கை மேலும் கூறியுள்ளது.
UP வாரியர்ஸ் அணியிலும் ஒரு மாற்றம்
மேலும் அமெரிக்க வேகப்பந்து வீராங்கனை தாரா நோரிஸும் WPL 2026 சீசனில் UP வாரியர்ஸ் (UPW) அணிக்காக விளையாட மாட்டார். ஏனெனில், அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் நடைபெறவுள்ள 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்காக அவர் அமெரிக்க தேசிய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நோரிஸுக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் சார்லி நாட்டை UPW அணி அறிவித்துள்ளது. WPL 2026 ஜனவரி 9-ம் தேதி தொடங்குகிறது, தொடக்க ஆட்டத்தில் RCB அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


