மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் சீசனுக்கான ஏலத்தில் ஸ்மிரிதி மந்தனாவை ரூ.3.4 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது. இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் ஆடுகின்றன.
இந்த சீசனுக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்துவருகிறது. மொத்தம் 409 வீராங்கனைகள் ஏலம் விடப்படுகின்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் முதல் வீராங்கனையாக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஏலம்விடப்பட்டார்.
ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட இந்திய நட்சத்திர டாப் ஆர்டர் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவிற்காக மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் கடும் போட்டி போட்டன. கடைசியில் ரூ.3.40 கோடிக்கு ஆர்சிபி அணி ஸ்மிரிதி மந்தனாவை எடுத்தது.
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்காக ஆரம்பத்தில் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் போட்டியிட்டன. அதன்பின்னர் இந்த போட்டியில் இணைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு ஹர்மன்ப்ரீத் கௌரை ஏலத்தில் எடுத்தது.
ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி எடுத்தது.
