மகளிர் டி20 உலக கோப்பையை 6வது முறையாக வென்று ஆஸ்திரேலியா சாதனை..!

மகளிர் டி20 உலக கோப்பை ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக உலக கோப்பையை வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்தது.
 

womens t20 world cup 2023 australia beat south africa in final and lifts trophy for 6th time

மகளிர் டி20 உலக கோப்பை ஃபைனலில் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், கிரேஸ் ஹாரிஸ், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகன் ஸ்கட், டார்ஸி பிரௌன்.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மேரிஸன் கேப், க்ளோ ட்ரையான், நாடின் டி க்ளெர்க், சுன் லூஸ் (கேப்டன்), அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபாங்கா காகா, நான்குலுலேகோ லாபா.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை அலைஸா ஹீலி 18 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆட ஆரம்பித்த ஆஷ்லே கார்ட்னெர் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கிரேஸ் ஹாரிஸ்(10), லானிங்(10), எலைஸ் பெர்ரி (7) ஆகியோர் சோபிக்காமல் சீரான இடைவெளியில் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை பெத் மூனி அரைசதம் அடித்தார்.

ஃபைனலில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த பெத் மூனி 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி.

157 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியை ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனாலும் இலக்கை விரட்ட கடுமையாக முயற்சித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios