திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக ஆர்சிபி வீரர் யஷ் தயாள் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.
Woman Files Complaint Against RCB Player Yash Dayal For Cheating Her: ஆர்.சி.பி அணி வீரர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். முதலமைச்சரின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல், ஐ.ஜி.ஆர்.எஸ் மூலம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
யஷ் தயாள் மீது பரபரப்பு புகார்
தனது புகாரில், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் தான் உறவில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். "கடந்த ஐந்து ஆண்டுகளாக புகார்தாரர் (அந்த பெண்) ஒரு கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தார். திருமண வாக்குறுதியுடன் அந்த நபர் (யஷ் தயாள்) அவளை தவறாக வழிநடத்தி உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டினார். புகார்தாரரை தனது குடும்பத்திற்கு அவர்களின் மருமகள் என்று அறிமுகப்படுத்தினார். இது அவரை முழுமையாக நம்ப வைத்தது," என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அலுவலகத்தை நாடினார்
மேலும், ''உறவின் போது, புகார்தாரர் உணர்ச்சி ரீதியாகவும், நிதி ரீதியாகவும் அவரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், அந்த ஆண் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற உறவுகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்தார்" என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூன் 14, 2025 அன்று பெண்கள் உதவி எண் 181 ஐத் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் போலீசார் இந்த வழககை விசாரிக்க மறுத்து விட்டதால், நிதி மற்றும் சமூக உதவியற்ற தன்மை காரணமாக, நீதி கோரி முதலமைச்சர் அலுவலகத்தை நாடியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
தான் யஷ் தயாளிடம் பேசிய சாட்களின் ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவை ஆதாரமாக உள்ளன என்றும் அந்த பெண் கூறியுள்ளார். "இந்த விஷயத்தை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. இந்த நடவடிக்கை எனக்கு மட்டுமல்ல. இப்படி ஏமாற்றப்படும் அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது'' என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி மேட்ச் வின்னர் யஷ் தயாள்
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி முதன் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இந்த ஆர்சிபி அணியில் முக்கிய வீரராக வலம் வந்த யஷ் தயாள் தனது அபார பந்துவீச்சின் மூலம் 15 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். யஷ் தயாள் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடுகிறார். இந்திய அணிக்காக இன்னும் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
