ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதை அடுத்து நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். காவல்துறையின் எச்சரிக்கையை RCB நிர்வாகமும், கர்நாடக அரசும் புறக்கணித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வென்றதை அடுத்து நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆர்.சி.பி நிர்வாகமும், கர்நாடக மாநில அரசும் பெங்களூரு காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்து வெற்றிக் கொண்டாட்டத்தை நடந்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெக்கான் ஹெரால்டு அறிக்கையின்படி, மூத்த காவல்துறை அதிகாரிகள், ஆர்.சி.பி வெற்றியைக் கொண்டாட்டத்தை குறுகிய காலத்திற்குள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், இந்த ஆலோசனையை ஆர்.சி.பி நிர்வாகமும், மாநில அரசும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
"வெளிநாட்டு வீரர்கள் இன்று அல்லது நாளை பெங்களூருவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்பதால், கொண்டாட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஆர்.சி.பி தரப்பு வாதிட்டது" என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். "அரசு இந்த கொண்டாட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட விரும்பியது. கொண்டாட்டத்திற்கு அரசு மறுத்திருந்தால், அது வேறு வகையான குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை காவல்துறையினர் அனைவரும் களத்தில் மிகவும் சோர்வாக இருந்தனர். குறுகிய அவகாசத்திற்குள் பெரும் கூட்டத்தை கையாள முடியாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். "ரசிகர்கள் இப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பார்கள் என்பதால், ஒரு வாரம் கழித்து கொண்டாட்டத்தை நடத்தலாம்" என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆரம்பத்தில், ஆர்சிபியின் வெற்றிக் கோப்பை ஊர்வலம் விதான சவுதாவில் தொடங்கி கப்பன் பார்க், எம்.ஜி. ரோடு வழியாக சின்னசாமி ஸ்டேடியத்தை வந்தடைய திட்டமிடப்பட்டது. ஆனால், "எந்த ஊர்வலத்தையும் நடத்த வேண்டாம், அதற்கு பதிலாக ஒரே இடத்தில் கட்டுப்பாடுகளுடன் நிகழ்வை நடத்த வேண்டும். வீரர்களை ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்து அங்கேயே கொண்டாட்டத்தை முடிக்க வேண்டும்" என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டு, உடனடியாக கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதால், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெரும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, ஆர்.சி.பி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக முதல்வர் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடாக உயர் நீதிமன்றம் ஆர்சிபி, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.