ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி விழாவில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிசிசிஐ இச்சம்பவத்தை "துரதிர்ஷ்டவசமானது" எனக் கூறியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிசிசிஐ (BCCI) ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், “பிரபலமாவதில் உள்ள எதிர்மறையான விளைவு” என்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கருத்து தெரிவித்துள்ளார்.

இன்னும் சிறப்பாக திட்டமிட்டிருக்க வேண்டும்:

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தேவஜித் சைகியா, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பிரபலமாவதில் உள்ள ஒரு எதிர்மறையான விளைவு. மக்கள் தங்கள் கிரிக்கெட் வீரர்கள் மீது வெறித்தனமாக உள்ளனர். ஏற்பாட்டாளர்கள் இதை சிறப்பாக திட்டமிட்டிருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

ஒரு வெற்றி கொண்டாட்டத்தை இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்யும்போது, ​​முறையான முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சைகியா வலியுறுத்தினார். "எங்கேயோ சில குறைபாடுகள் நடந்துள்ளன," என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், "கடந்த காலங்களிலும் ஐபிஎல் கொண்டாட்டங்கள் நடந்துள்ளன, கடந்த ஆண்டு கொல்கத்தாவில் கேகேஆர் வென்றபோது கூட எதுவும் நடக்கவில்லை" என்று அவர் நினைவுபடுத்தினார்.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு மும்பையில் நடந்த கொண்டாட்டங்களையும் தேவஜித் சைகியா உதாரணம் காட்டினார். "இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோதும் இதே நிலைதான். மும்பையில் ரசிகர்கள் கடல் போல திரண்டிருந்தனர். ஆனால் எதுவும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சீரான நடத்தையை உறுதிப்படுத்த இணைந்து செயல்பட்டனர். இனி இதுபோல எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் பாதுகாப்பைப் பற்றியும் சைகியா மேலும் பேசினார். "நேற்று அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது கூட, மைதானத்தில் 1,20,000 பேர் இருந்தனர். ஆனால் பிசிசிஐ ஒரு பிரத்யேக குழுவைக் கொண்டுள்ளது. அவர்கள் உள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான திட்டமிடலைச் செய்தது" என்று அவர் கூறினார்.

ஆர்.சி.பி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றதையொட்டி, புதன்கிழமை பிற்பகலில் பெங்களூரு வந்தடைந்தது. விமான நிலையத்தில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அணியை வரவேற்றார். நட்சத்திர வீரர் விராட் கோலியைப் பார்க்க ரசிகர்கள் சாலைகளிலும், சின்னசாமி மைதானத்திலும் திரண்டனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் வீரர்களின் பேருந்து அணிவகுப்பு நடைபெறவில்லை. பெங்களூரு போக்குவரத்து போலீசார் ஏற்கனவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தனர். நகரில் மழை பெய்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவம், ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு ஒரு சோகமான முடிவாக மாறியுள்ளது.