பெங்களூரு கூட்ட நெரிசல்: துயரத்தில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம்
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். முன்னேற்படுகள் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சரியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் சோகமாக மாறியுள்ளது.
பெங்களூருவின் மத்தியப் பகுதியில் உள்ள சின்னசாமி மைதானம் அருகே பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் இதுவரை 11 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைதேஹி மருத்துவமனையில் நான்கு பேரும், பவுரிங் மருத்துவமனையில் ஏழு பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது.
தங்களுக்குப் பிடித்த ஆர்சிபி அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து, அவர்களைக் காண எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வந்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி கோப்பையை வென்றபோது மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டார். இதைப் பார்த்த ரசிகர்களும் கண்ணீர் விட்டனர். ஆனால், அடுத்த 24 மணிநேரத்திற்கு அந்த ரசிகர்களில் பலர் உயிரிழ்ந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சரியான தடுப்புகளும், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தால், இந்த குழப்பம் நடந்திருக்காது என்று ரசிகர்கள் பலர் கூறுகின்றனர்.
இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 11 பேர் இறந்துள்ள நிலையில், மருத்துவமனையின் முன் அவர்களது குடும்பத்தினரின் கூக்குரல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் 14 வயது சிறுமி திவ்யான்ஷியும் உயிரிழந்தார். 9ஆம் வகுப்பு படித்து வந்த திவ்யான்ஷி, தனது அத்தையுடன் மைதானத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தின் பிரதான வாயிலை உடைத்து மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநில அரசே இதுபோன்ற துயரச் சம்பவத்துக்குக் காரணம் என்று கடுமையாக சாடுகின்றனர். இது அரசாங்கத்தால் தூண்டப்பட்ட கொலை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்ததாகவும், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறினார். இருப்பினும், அவர்களால் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.
முதல்வர் சித்தராமையாவும் உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வரும் பவுரிங் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களின் நலம் குறித்து விசாரித்தனர்.