ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்பார்த்ததை விட அதிகமானோர் கலந்துகொண்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு எம்.சின்னசுவாமி ஸ்டேடியம் அருகே கூடிய ரசிகர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிதியுதவி அறிவிப்பு:

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், இந்த கூட்ட நெரிசல் போன்ற சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதலமைச்சருமான சித்தராமையா, "இது ஒரு பெரிய சோகம். கூட்ட நெரிசலில் மக்கள் இறந்துள்ளனர். 11 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 33 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பௌரிங் மற்றும் வைதேகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை கொண்டாட பெருந்திரளான மக்கள் கூடியிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.