ஐபிஎல் 2025 பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணியை கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். சின்னசுவாமி மைதானத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி ஐபிஎல் 2025 பட்டத்தை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் "மிகவும் வேதனையளிக்கிறது" என அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பையை வென்றதால், பெங்களூரு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில், பெங்களூரு அணியினருக்கு சின்னசுவாமி மைதானத்தில் இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை மாளிகையான விதான் சௌதாவிலிருந்து சின்னசுவாமி மைதானம் வரை அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
ஆர்.சி.பி அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்த சூழலில், சின்னசுவாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் பலர் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
