ISRO Resignations: 100 விஞ்ஞானிகள் அடுத்தடுத்து ராஜினாமா.. இஸ்ரோவில் என்ன நடக்கிறது?
ISRO Resignations: இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO (Indian Space Research Organisation)-வில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் ராஜினாமா செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா
சமீப காலமாக, இஸ்ரோவில் இருந்து 100க்கும் மேற்பட்ட சீனியர் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் விருப்ப ஓய்வும் (VRS) பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக, பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து 80 பேரும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகளும் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ககன்யான் போன்ற பெரிய திட்டங்களில் பணியாற்றுபவர்களும் விலகுவதால், இது நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றம்
இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் பெரும் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பல விஞ்ஞானிகள் இஸ்ரோவை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது. ராஜினாமா செய்தவர்களில் எல்விஎம்-3 திட்ட இயக்குநர், சந்திரயான்-3 சிமுலேஷன்ஸ் குழு மேலாளர் போன்ற பல சீனியர்களும் அடங்குவர். இப்படிப்பட்ட நிபுணர்கள் திடீரென நிறுவனத்தை விட்டு வெளியேறினால், ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களின் நிலை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது. இந்த கவலையின் காரணமாகவே, அரசும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மத்திய விண்வெளித் துறை
மத்திய விண்வெளித் துறை, ஜூலை 14, 2026 அன்று ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இஸ்ரோவின் உள்ளூர் மையங்களின் இயக்குநர்களுக்கு இருந்த ஒரு அதிகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது, இனி அந்த மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் ராஜினாமா செய்தால் அதை ஏற்கும் அதிகாரம் இயக்குநர்களுக்குக் கிடையாது. ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணிபுரியும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகள் ராஜினாமா செய்யவோ அல்லது விருப்ப ஓய்வு பெறவோ, இனி நேரடியாக மத்திய விண்வெளித் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
இஸ்ரோ தலைவர் விளக்கம்
இந்த ராஜினாமாக்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பேசுகையில், 'ஊழியர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுவது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை' என்றார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பெரிய விண்வெளிப் பயணங்களில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே தங்கள் இலக்கு என்று நாராயணன் கூறினார். ராஜினாமா செய்தவர்களின் பொறுப்புகளை உடனடியாக மற்றொருவருக்கு வழங்கி, திட்டங்களை வேகமாக முடிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

