2019 உலக கோப்பை ஃபைனலில் சூப்பர் ஓவரில் மார்டின் கப்டில் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகிய இருவரையும் இறக்கியது குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விளக்கமளித்துள்ளார். 

2019 உலக கோப்பை இறுதி போட்டியை போன்ற பரபரப்பான மற்றும் மனதை கசக்கி பிழிந்த ஒரு போட்டியை இனிமேல் பார்க்கமுடியுமா என்பதே சந்தேகம்தான். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அந்த இறுதி போட்டியை பார்த்தவர்களுக்கு செம த்ரில்லர் மூவி பார்த்ததைவிட மிகச்சிறந்த அனுபவம் கிடைத்திருக்கும். அந்தளவிற்கு ரசிகர்களை சீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி அது. 

போட்டி டை ஆனதையடுத்து முடிவை பெறுவதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதையடுத்து பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்பட்டதே கடும் சர்ச்சையானது. இறுதி போட்டியில் ஆடிய நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோப்பைக்குத் தகுதியான அணிகள் தான். தார்மீக அடிப்படையில், இரு அணிகளுமே வெற்றி பெற்ற அணிகள் தான். 

வெகு சிறப்பாக ஆடியிருந்தும் கூட, துரதிர்ஷ்டவசமாக கோப்பையை வெல்ல முடியாமல் போனது, நியூசிலாந்து அணிக்கு பெரிய ஏமாற்றம்தான். உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 241 ரன்கள் அடித்தது. 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோகிஸின் மிகச்சிறப்பான பேட்டிங்கால், போட்டி டை ஆனது. இதையடுத்து போட்டி முடிவை தீர்மானிக்க, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து 15 ரன்கள் அடித்து, 16 ரன்களை நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேம்ஸ் நீஷமும் மார்டின் கப்டிலும் இறக்கப்பட்டனர். முதல் 5 பந்துகளையும் நீஷம் தான் எதிர்கொண்டு ஆடினார். முதல் 5 பந்தில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட மார்டின் கப்டில் 2 ரன்கள் அடித்தால் நியூசிலாந்துக்கு உலக கோப்பை. ஆனால் அதை பெரிய ஷாட்டாக அடிக்க முடியாத கப்டிலால், ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது ரன் ஓடும்போது ரன் அவுட்டானார். அதனால் சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அஷ்வினின் யூடியூப் சேனலில் ஃபி.ஆர்.எஸ் வித் ஆஷ் என்ற நிகழ்ச்சியில், அஷ்வினுடனான உரையாடலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 2019 உலக கோப்பையில் சூப்பர் ஓவரில் நீஷம் மற்றும் கப்டிலை இறக்கியது குறித்து விளக்கமளித்தார் கேன் வில்லியம்சன். 

இதுகுறித்து பேசிய கேன் வில்லியம்சன், பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டுடன் ஆலோசனை நடத்தினேன். சூப்பர் ஓவரில் யாரை இறக்குவது என்று என் மனதில் சில வீரர்களை நினைத்திருந்தேன். சூப்பர் ஓவரில் 2வது பேட்டிங்  என்பதால், இலக்கை பொறுத்தும், எதிரணியில் எந்த பவுலர் வீசுகிறார் என்பதை பொறுத்தும் தான் பேட்ஸ்மேன்களை இறக்க வேண்டும்.

நீஷம் உலக கோப்பை முழுவதும் நன்றாக ஆடினார். நல்ல பேட்டிங் டச்சில் இருந்ததால், அவரையும் கப்டிலையும் இறக்கினோம். கப்டில் அருமையான பேட்ஸ்மேன்; அவரை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. அதனால் அவரும் நீஷமும் இறக்கப்பட்டனர். ஆர்ச்சர் மிகச்சிறந்த பவுலர். இறுதி போட்டியில் ஏகப்பட்ட உணர்வுகள்.  போட்டி முடிந்த விதம் வேதனையளித்ததாக வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.