இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் வரும் பதினைந்தாம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

அந்த போட்டிக்கான இந்திய அணியில், வீரர்கள் காயம் காரணமாக ஏராளமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. முதல் 2 டெஸ்ட்டில் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய நிலையில், 3வது டெஸ்ட்டில் பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் காயமடைந்து கடைசி டெஸ்ட்டில் ஆடாமல் விலகியுள்ளனர். எனவே கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியில் குறைந்தது 3 மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இந்திய அணிக்கு இந்த தொடரில் வீரர்கள் காயம் பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், ஆஸி.,க்கு காயம் அந்தளவுக்கு தொந்தரவளிக்கவில்லை. எனினும் 3வது டெஸ்ட் போட்டியில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸிலேயே அரைசதமும் அடித்து அசத்திய ஆஸி., அணியின் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு, போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவர் கடைசி போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. பெரும்பாலும் அவர் ஆடுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

முதல் 2 டெஸ்ட்டில் மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில், 3வது டெஸ்ட்டில் வார்னரும் புகோவ்ஸ்கியும் இறங்கினர். இப்போது புகோவ்ஸ்கி காயமடைந்ததால், கடைசி டெஸ்ட்டில் மீண்டும் தொடக்க ஜோடி மாற்றப்படவுள்ளது. வார்னருடன் ஜோ பர்ன்ஸ் தொடக்க வீரராக இறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.