ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? இதை வெளிநாட்டில் நடத்துவதில் என்ன கட்டாயம்?  இந்தியாவில் இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா?

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியுள்ளது. இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்கு 350 வீரர்கள் களமிறங்குகின்றனர். அனைத்து அணிகளிடமும் மொத்தமாக ரூ.237.55 கோடி உள்ளதால் மினி ஏலம் களைகட்டப்போகிறது. உலகின் பணக்கார விளையாட்டான ஐபிஎல்லில் பணமழை கொட்டுகிறது. ஆனால் ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் தொடர்ந்து வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.

ஐபில் ஏலம் ஏன் அபுதாபியில்?

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஐபிஎல் ஏலம் தொடர்ந்து ஏன் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா கார்க், ''ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? இதை வெளிநாட்டில் நடத்துவதில் என்ன கட்டாயம்?

இந்தியாவில் இடங்கள் பற்றாக்குறையா?

இந்தியாவில் இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா? ஐபிஎல் தேசிய பெருமையின் அடையாளமாக இருந்தால், இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்?' என்று தெரிவித்தார்.

துரோகி என்று முத்திரை

தொடர்ந்து பேசிய பிரியங்க் கார்கே, ''இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் பிசிசிஐ என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான்'' என்று பாஜகவை அவர் கிண்டல் செய்தார். அபுதாயில் ஐபிஎல் ஏலம் தொடங்கியுள்ள நிலையில், மொத்தம் 1390 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 350 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

களைகட்டும் ஐபிஎல் ஏலம்

இதில் 16 பேர் சர்வதேச இந்திய வீரர்கள், 96 வெளிநாட்டு வீரர்கள், 224 அன்கேப்டு இந்திய வீரர்கள் மற்றும் 14 அன்கேப்டு வெளிநாட்டு வீரர்கள் ஆகியோர் உள்ளனர். ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.64.30 கோடி உள்ளது. சிஎஸ்கே அணியிடம் ரூ.43.40 கோடி கையிருப்பு உள்ளது. இதனால் இந்த அணிகள் அதிக வீரர்களை எடுக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் குறைந்தபட்சமாக ரூ.2.5 கோடி கையிருப்பு வைத்துள்ளது.