வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்துள்ளது.
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் போட்டியும் டிராவிலேயே முடிந்துள்ளது.
ரூட்- ஸ்டோக்ஸ் சதம்:
பார்படாஸில் நடந்த 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். ஜோ ரூட் 153 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 120 ரன்களையும் குவித்தனர். டேனியல் லாரன்ஸும் நன்றாக ஆடி 91 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 507 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி.
பிராத்வெயிட் - பிளாக்வுட் அபாரம்:
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான க்ரைக் பிராத்வெயிட் அபாரமாக பேட்டிங் ஆடி 160 ரன்களை குவித்தார். பிளாக்வுட்டும் நன்றாக பேட்டிங் ஆடி 102 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரியளவில் ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் 411 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி.
போட்டி டிரா:
96 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. கடைசி நாள் ஆட்டத்தில் 65 ஓவர்கள் எஞ்சியிருக்க கடைசி இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்த நிலையில் போட்டி முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டியும் டிராவிலேயே முடிந்தது. முதல் இன்னிங்ஸில் சதமும், 2வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
