ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடமுடியவில்லை. தொடக்க வீரர்கள் லூயிஸும் ஷாய் ஹோப்பும் மந்தமாக தொடங்கி, அவர்கள் அவுட்டாகும் வரை மந்தமாகவே ஆடிவிட்டு சென்றனர். 

லூயிஸ் 75 பந்துகளில் 54 ரன்களும் ஹோப் 77 பந்துகளி 43 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த சேஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவிற்கு நன்றாக ஆடிய ஹெட்மயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பொல்லார்டு வெறும் 9 ரன்னில் நடையை கட்டினார். ஹோல்டர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய நிகோலஸ் பூரான் அரைசதம் அடித்தார். பின்னர் டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 

பூரானின் கடைசி நேர அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 247 ரன்களை எட்டியது. பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடிய பூரான் 67 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 248 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். நல்ல பேட்டிங் டெப்த்தை கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இது அடிக்கக்கூடிய இலக்குதான். ஆனால் அவசரப்படாமல் தெளிவாக ஆட வேண்டும். ஆஃப்கானிஸ்தான் அணி என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இக்ரம் அலி கில், ரஹ்மத் ஷா, ஹஸ்ரதுல்லா சேசாய், அஸ்கர் ஆஃப்கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.