இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது. 

இந்திய அணி அண்மைக்காலமாக பெரிதும் சார்ந்துள்ள, டாப் 3 வீரர்களும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 

இந்திய அணி 80 ரன்களுக்கே கோலி, ராகுல், ரோஹித் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 3 விக்கெட்டுகளுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், அணிக்காகவும் தனக்காகவும் நன்ராக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் களத்திற்கு வந்தார். களத்திற்கு வந்ததிலிருந்தே தனது இயல்பான ஷாட்டுகளை சற்று கவனமாக அடித்தார். எப்போதும்போல சும்மா தூக்கியடித்து அவுட்டாகாமல், பொறுப்பாகவும் அதேநேரத்தில் பந்துகளை வீணடிக்காமலும் ஆடி ஸ்கோர் செய்தார். 

ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களிலும் ரிஷப் பண்ட் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த இருவருமே டெத் ஓவர் வரை ஆடி ஸ்கோரை உயர்த்தாமல், இடையிலேயே ஆட்டமிழந்ததால், கடைசி ஓவர்களில் கிடைத்திருக்க வேண்டிய ஸ்கோர் கிடைக்கவில்லை. 

ஆனால் இவர்களுக்கு பின்னர் களத்திற்கு வந்த கேதர் ஜாதவ், நன்றாகவே அடித்து ஆடினார். 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 35 பந்தில் 40 ரன்கள் அடித்த கேதர் ஜாதவும் 48வது ஓவரில் ஆட்டமிழக்க, ஜடேஜாவும் 21 ரன்னில் நடையை கட்டினார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 287 ரன்கள் அடித்தது. 

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை போகப்போக மெதுவாகும் என்பதால், இந்த ஸ்கோரே போதும் என்ற இந்திய அணியின் நம்பிக்கையை சிதைத்தனர் வெஸ்ட் இண்டீஸின் ஹோப்பும் ஹெட்மயரும். 288 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சுனில் ஆம்ப்ரிஷ் 9 ரன்களில் தீபக் சாஹரின் பந்தில ஆட்டமிழந்தார். இதையும் படிங்க: முதல் ஒருநாள் போட்டி: பொல்லார்டு இப்படி ஒரு முடிவெடுத்தது எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு.. அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த கோலி

இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப்புடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இன்னிங்ஸ் ஆடினாலே, இலக்கை எட்டிவிட முடியும் என்பதை உணர்ந்து, விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடியது இந்த ஜோடி. ஒருமுனையில் ஹெட்மயர் இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்க, மறுமுனையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் பணியை மட்டும் செவ்வனே செய்தார் ஹோப்.

ஷமி, தீபக் சாஹர், ஜடேஜா, குல்தீப், துபே, கேதர் ஜாதவ் என இந்திய அணியின் அனைத்து பவுலர்களும் தீவிரமாக முயன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய ஹெட்மயர் சதமடித்து அசத்தினார். இந்தியாவுக்கு எதிராக தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் ஹெட்மயர். சதத்திற்கு பின்னர், ஹெட்மயரை வீழ்த்தும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் தீபக் சாஹர். ஆனால் லாங் ஆனில் ஹெட்மயரின் கேட்ச்சை தவறவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். அதை பயன்படுத்தி சில சிக்ஸர்களை விளாசிய ஹெட்மயர், 139 ரன்னில் அதே ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்தே வெளியேறினார். 

இதையடுத்து ஷாய் ஹோப்புடன் பூரான் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து தனது நிதானத்தையும் முதிர்ச்சியான பேட்டிங்கையும் ஆடிய ஷாய் ஹோப்பும் சதமடித்தார். ஹோப்பும் பூரானும் சிறப்பாக ஆடி 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தனர். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.