ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வத்தில் ஐபிஎல் எப்போது நடக்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

ஐபிஎல்லில் இதுவரை அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சிஎஸ்கே 3 முறையும் கோப்பையை வென்றுள்ளன. கேகேஆர் அணி இரண்டு முறை வென்றுள்ளது. ஹைதராபாத் அணியும் 2 முறை(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறை வென்றுள்ளது. ஐபிஎல்லில் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

எனவே அந்த மூன்று அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் கடந்த சில சீசன்களாக கடுமையாக போராடிவருகின்றன. வரப்போகும் 13வது சீசனிலும் அதே முனைப்பில் தான் உள்ளன. 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், முதல் தர கிரிக்கெட்டின் சாதனை நாயகனுமான வாசிம் ஜாஃபர், ஐபிஎல் 13வது சீசனில் எந்த 2 அணிகள் ஃபைனலில் மோதும் என ஆருடம் தெரிவித்துள்ளார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வாசிம் ஜாஃபரிடம், ஐபிஎல் 13வது சீசனில் எந்த அணிகள் ஃபைனலில் மோதும் என கணிக்க கேட்டனர். அதற்கு பதிலளித்த வாசிம் ஜாஃபர், நான் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கண்டிப்பாக ஃபைனலுக்கு வரும். கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்த்து ஆட எந்த அணி ஃபைனலுக்கு வந்தாலும் பரவாயில்லை என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.