டெல்லி கேபிடள்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ஒரு வியூகத்தில் தவறு செய்துவிட்டதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் தீவிரமாக தயாராகிறது.
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிடள்ஸ் அணி, ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், பிரித்வி ஷா மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது.
மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரோவ்மன் பவல், டிம் சேஃபெர்ட், லுங்கி இங்கிடி ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், ஷர்துல் தாகூர், சர்ஃபராஸ் கான், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சக்காரியா, மந்தீப் சிங், லலித் யாதவ், யஷ் துல், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிங்க - IPL 2022: கோலி இப்பதான் ரொம்ப டேஞ்சரஸான பிளேயர்.. எதிரணிகளை எச்சரிக்கும் மேக்ஸ்வெல்
ஒரு அணி அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம் என்ற சூழலில், டெல்லி கேபிடள்ஸ் அணி அன்ரிக் நோர்க்யாவுடன் சேர்த்து 7 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே எடுத்துள்ள நிலையில், வாசிம் ஜாஃபர் அதை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள வாசிம் ஜாஃபர், டெல்லி கேபிடள்ஸ் ஏலத்தில் ஒரு வியூகத்தில் தவறு செய்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் தொடர்களை மனதில் வைத்து வீரர்களை எடுத்திருக்க வேண்டும். 8 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம் என்றபோதிலும், 7 பேரை மட்டுமே டெல்லி அணி எடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருந்த டெல்லி கேபிடள்ஸ் அணி இது கிடையாது. இப்போது அணி காம்பினேஷன் முற்றிலுமாக மாற்றியுள்ளது. மந்தீப் சிங் அல்லது யஷ் துல் தொடக்க வீரராக இறங்கலாம். சர்ஃபராஸ் கான் 3ம் வரிசையில் இறங்கலாம். அணி காம்பினேஷனில் நிறைய அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டியிருக்கிறது என்றார் வாசிம் ஜாஃபர்.
