வாசிம் அக்ரம் ஆல்டைம் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர். 150 கிமீ வேகத்திற்கு அதிகமாகவும், அருமையாக ஸ்விங்கும் செய்து வீசக்கூடியவர். வேகமும் ஸ்விங்கும் கலந்து வீசுவதால், அவரது பவுலிங்கை எதிர்கொள்ள சச்சின், லாரா, ஜெயசூரியா போன்ற பெரிய பெரிய ஜாம்பவன்களே திணறியுள்ளனர். 

சச்சின், லாரா, ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, ஸ்டீவ் வாக் ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கின் மூலம் மிரட்டியவர் வாசிம் அக்ரம்.

பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தமாக 916 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் முதன்மையானவரான வாசிம் அக்ரம், அவரும் வக்கார் யூனிஸும் சேர்ந்து, எதிரணி பேட்டிங் ஆர்டரை சிதைத்துள்ளனர். 

ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான வாசிம் அக்ரம், தனது சமகால பவுலர்களில் சிறந்த பவுலர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசில் அலியுடனான உரையாடலில், தனது சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் சிலரது பெயரை வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம்,  வெஸ்ட் இண்டீஸின் குர்ட்லி ஆம்ப்ரூஸ், குர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலியாவின் மெக்ராத், தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு ஆகியோர் எனது காலத்தில் ஆடிய மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள்.

ஆலன் டொனால்டு என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இங்கிலாந்தில் 1989ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் நான் லன்காஷைர் அணியில் ஆடினேன். ஆலன் டொனால்டு ஆடிய அணிக்கு எதிராக ஆடிய போட்டி ஒன்றில், நான் 8ம் வரிசையில் பேட்டிங் ஆடச்சென்றேன். ஆடுகளம் சீராக இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்தது. 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசும் ஆலன் டொனால்டு, அதிவேகத்தில் ஒரு பவுன்ஸரை போட்டார். அதை புல் ஷாட் ஆட நினைத்தேன். ஆனால் பந்து முட்டுவாய்க்கு கீழே அடித்து எனக்கு காயம் ஏற்பட்டது. 

முட்டுவாயில் காயம் பட்ட இடத்தில் 20 தையல் போடப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால் அப்போது இளம் வயதான நான், ஆலன் டொனால்டை பழிதீர்க்க நினைத்தேன். ஆனால் டொனால்டு எனது பவுலிங்கில் பேட்டிங் ஆடவில்லை. ஆனாலும் நான் நன்றாக பந்துவீசியதால் அந்த போட்டியில் நாங்கள் ஜெயித்தோம் என்று டொனால்டு தனது முட்டுவாயை உடைத்தை சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.