இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் வரும் பதினைந்தாம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக  சில மாற்றங்கள் செய்யப்படும். இந்த தொடரில் இந்திய அணிக்கு வீரர்களின் காயம் தொடர் சோகமாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் ஷமி, 2வது போட்டியில் உமேஷ் யாதவ், 3வது போட்டியில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறினர். 3வது டெஸ்ட்டுக்கு முந்தைய பயிற்சியில் காயமடைந்து கேஎல் ராகுலும் வெளியேறினார்.

3வது டெஸ்ட்டில் பேட்டிங் ஆடியபோதே தொடைப்பகுதி காயத்தால் அவதிப்பட்ட ஹனுமா விஹாரியும் கடைசி டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். அஷ்வின் முதுகு வலியால் அவதிப்பட்டுவருகிறார். அவர் ஆடுவாரா இல்லையா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை.

3வது டெஸ்ட்டில் ஆடியவர்களில் ஹனுமா விஹாரி, ஜடேஜா, பும்ரா ஆகிய மூவரும் ஆடமாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ள நிலையில், ஜடேஜாவின் இடத்தில், ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் ஆடவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ஸ்பின்னர் சுந்தர் என்பதால் அவர் ஆடுவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பந்தை அதிகமாக திருப்பவில்லையென்றாலும் ஸ்மார்ட்டாக வீசக்கூடிய பவுலர் வாஷிங்டன் சுந்தர். பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர் என்ற வகையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.