ஐபிஎல் வரலாற்றில் தன்னை யாராலும் நெருங்கக்கூட முடியாத அளவுக்கு வார்னர் ஒரு சாதனையை செய்துவைத்துள்ளார். 

ஐபிஎல்லில் கெய்ல், வார்னர் ஆகியோர் சிறந்த வீரர்களாக பல ஆண்டுகளாக ஜொலித்து வருகின்றனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை முடிந்து நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் சன்ரைசர்ஸ் அணியில் களமிறங்கிய வார்னர், இந்த சீசனில் வெளுத்து வாங்கிவிட்டார். 

12 இன்னிங்ஸ்களில் ஆடி 8 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 692 ரன்களை குவித்து, இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டிதான் இந்த சீசனில் அவரது கடைசி போட்டி. உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். 

இந்த சீசனில் தனது கடைசி போட்டியான பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 81 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று, வெற்றியுடன் ஆஸ்திரேலியா செல்கிறார். 

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 8 அரைசதங்களை பூர்த்தி செய்துள்ளார் வார்னர். ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அடிக்கப்பட்ட அதிகபட்ச அரைசதங்கள் இதுதான். இதற்கு முன்னரும் இந்த சாதனை வார்னரிடமே இருந்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 அரைசதங்களையும் சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5 அரைசதங்களையும் அடித்துள்ளார் வார்னர். 

தனது முந்தைய சாதனைகளை தானே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் வார்னர். ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்த முதல் மூன்று இடங்களுமே வார்னர் வசமே உள்ளன.