ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். முதல் விக்கெட் விரைவில் விழுந்தாலும் அதன்பின்னர் வார்னர்ம் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.

சிறப்பாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 22 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் தாமதமாக இரண்டாவது செசன் தொடங்கியது. 

இரண்டாவது செசன் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுஷேனும் அரைசதம் கடந்தார். இரண்டு செசன் முடிந்து, இரவு உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும் லபுஷேன் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதால், இது ஆட்டத்தின் முடிவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் விரைவில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மூன்றாவது செசனை அணுகினர் வார்னரும் லபுஷேனும். 

உணவு இடைவேளை முடிந்து வந்ததும் அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய வார்னர் சதம் விளாச, அவரை தொடர்ந்து லபுஷேனும் சதமடித்தார். சதத்திற்கு பின்னர் அடித்து ஆடிய வார்னர், இந்த போட்டியிலும் 150 ரன்களை கடந்தார். முதல் போட்டியில் 150 ரன்களை கடந்து அடித்த வார்னர், இந்த போட்டியிலும் 150 ரன்களை கடந்து களத்தில் உள்ளார். லபுஷேனும் வார்னருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அபாரமாக ஆடிவருகிறார். 

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்துள்ளது. வார்னர் 166 ரன்களுடனும் லபுஷேன் 126 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.