இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இரு அணிகளுமே பல்லாண்டுகளாக சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்தன. அப்போதெல்லாம் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிகச்சிறப்பாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் கை தான் வெகுவாக ஓங்கியிருக்கிறது. பாகிஸ்தான் அணி சிறந்த அணியாக இப்போது இல்லை. 

இரு அணிகளும் மோதிய, உலக கோப்பை தவிர மற்ற சாதாரண தொடர்களில் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரேயளவிலான வெற்றிகளைத்தான் பெற்றிருக்கின்றன. ஆனால் உலக கோப்பை என்று வரும்போது, பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்துவிடும். இதுவரை உலக கோப்பை தொடரில் ஒருமுறை பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியதேயில்லை. 

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ரெக்கார்டை இந்திய அணி பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக தக்கவைத்து வருகிறது. 

1996,1999 உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தான் வென்றது. 2003ல் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தான் வென்றது. 2007 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆடவில்லை. 

2011 உலக கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது. 2015 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் ஆடவில்லை. 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. 

எனவே இதுவரை உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட தோற்றிராத இந்திய அணி அந்த ரெக்கார்டை பல்லாண்டுகளாக தக்கவைத்த் கொண்டுள்ளது. 

இந்நிலையில், உலக கோப்பையில் பாகிஸ்தானால் இந்திய அணியை வீழ்த்த முடியாதது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஃபாஸ்ட் பவுலருமான வக்கார் யூனிஸ், உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துள்ளது. ஆனால் உலக கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே இந்தியாவின் கை தான் ஓங்கியிருந்திருக்கிறது. உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை விட நன்றாக ஆடுகிறது. இந்தியா அந்த வெற்றிக்கு தகுதியான அணி தான். 

2003 உலக கோப்பையில் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கி அருமையாக ஆடி வெற்றி பெற்றது. இந்திய அணி அளவிற்கு பாகிஸ்தான் ஸ்மார்ட்டாக ஆடவில்லை. 2011, 1996 உலக கோப்பைகளிலும் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி தான் அதை தவறவிட்டது. உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்த முடியாததற்கு குறிப்பிட்ட ஒரு காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. உலக கோப்பை போட்டியில் இருக்கும் அழுத்தமும் ஒரு காரணம். பாகிஸ்தான் அணி அழுத்தத்தை இந்திய அணிக்கு அளவுக்கு கையாளவில்லை. எனவே அதுவும் ஒரு காரணம். ஆனால் இதுதான் காரணம் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது என்று வக்கார் யூனிஸ் தெரிவித்தார்.