ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக ஜொலிக்கும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக இறங்கும் முதன்முறையாக கிடைத்துள்ளது. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக இறங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கான இடத்தை டெஸ்ட் அணியிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். இந்நிலையில், ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவானான விவிஎஸ் லட்சுமணன் தெளிவான விளக்கமான அறிவுரையை வழங்கியுள்ளார். 

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லட்சுமணன் தெளிவான அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய லட்சுமணன், நான் வெறும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்த சமயத்தில் தொடக்க வீரராக இறக்கப்பட்டேன். அப்போது சில விஷயங்களில் நான் தவறு செய்தேன். ஆனால் ரோஹித் 12 ஆண்டு காலம் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளதால், அவர் டெஸ்ட் போட்டியில் ஒரு தொடக்க வீரராக நான் செய்த தவறை செய்யமாட்டார் என நினைக்கிறேன். 

ரோஹித் முதிர்ச்சியான, அனுபவம் வாய்ந்த வீரர். அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். தொடக்க வீரராக இறங்கியபோது, எனது மனநிலையை மாற்றினேன். அது நான் செய்த தவறு. அதுகூட பரவாயில்லை. பேட்டிங் டெக்னிக்கை மாற்றினேன். அதுதான் மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. பேட்டிங் டெக்னிக்கை திடீரென மாற்றியதுதான், என்னால் தொடக்க வீரராக சோபிக்கமுடியாமல் போனதற்கு காரணம். ரோஹித் நான் செய்த தவறை செய்யமாட்டார் என நம்புகிறேன். 

உங்களுடைய இயல்பான ஆட்டத்தை அதிகமாக மாற்றி, அது நல்ல பலனை கொடுக்காவிட்டால் ரிதம் போய்விடும். ரோஹித் சிறப்பாக ஆடி நல்ல ரிதத்தில் இருந்தால், அசாத்தியமாக அசத்தக்கூடியவர். எனவே அவரது ரிதம் கெட்டுவிடாமல் இருக்க வேண்டும். அது கெட்டுவிட்டால், பின்னர் அனைத்துமே சொதப்பலாக முடிந்துவிடும். எனவே தொடக்க வீரராக இறங்கும்போது மனநிலையில், சிறிய மாற்றங்கள் செய்யலாம். ஆனால் பேட்டிங் டெக்னிக்கில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அவரது இயல்பான ஆட்டத்தையே ஆடவேண்டும். 

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கும்போது உடம்பிலிருந்து விலகிய நிலையில் நிறைய ஷாட்டுகளை ஆடக்கூடாது, பவுன்ஸர்களை சீண்டாமல் விட்டுவிட வேண்டும். இதுமாதிரியான விஷயங்களை பொறுமையாக கடைபிடிப்பது மிக முக்கியம். ஒருநாள் போட்டிகளில் வெள்ளை கூக்கபரா பந்துகள் ஸ்விங் ஆகும்போது என்ன செய்வோமோ அதை செய்ய வேண்டும்.

இந்திய மண்ணில் நமது ஆடுகளங்களில், அவர் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்குவது அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. ஃப்ரெஷ்ஷான பிட்ச்சில் ஆடுவது அவருக்கு பெரிய பலம். ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் நேரம் ஆக ஆக பிட்ச்சின் தன்மை மாறுவதால், பந்து நன்றாக சுழலும். எனவே ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஸ்பின் ஆகும்போது ஆடுவது மிகவும் கடினம். 

ரோஹித் சர்மாவிற்கு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்வுக்குழு இந்தளவிற்கு ஒரு வீரரின் நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வாய்ப்பளிப்பதெல்லாம் அரிதினும் அரிதான சம்பவம். நமது கண்டிஷனில் ஆடுவது ரபாடாவை தவிர மற்ற தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு புதிது. எனவே ரபாடா மட்டும்தான் விக்கெட் வீழ்த்தக்கூடிய பவுலராக இருப்பார். அவரைத்தவிர மற்றவர்களை எளிதாக சமாளித்துவிடலாம். ரோஹித் தொடக்கத்தில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் களத்தில் நிலைத்து நின்று நன்றாக செட்டில் ஆகிவிட்டால், இரட்டை சதம் அல்லது அதைவிட மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு வாய்ப்புள்ளது. 

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட விரும்புகிறார். அதேநேரத்தில் ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் இருப்பதால் மிடில் ஆர்டரில் அவருக்கு இடமில்லை. எனவே தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் அறிவார். ரோஹித் ஒரு சிறந்த வீரர். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பென்ச்சில் உட்காருவதை விட ஆடும் லெவனில் இடம்பெறவே அவர் விரும்புவார் என்பதால், தொடக்க வீரராக தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.