விராட் கோலிக்கு பெரும் சவால் எதுவென்று முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் பல சாதனைகளை முறியடித்து, புதிய மைல்கற்களை எட்டிவருகிறார் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். தனது 242வது போட்டியில் அந்த மைல்கல்லை எட்டிய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 12000 ரன்களை எட்டிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின்(300) சாதனையை முறியடித்தார் கோலி.

இந்நிலையில், விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமணன், ஒவ்வொரு தொடரிலும் கோலி ஆடும் விதம், அந்த தீவிரத்தன்மையையும் வேட்கையையும் அவர் களத்தில் காட்டும் விதம் ஆகியவை அபரிமிதமானது. ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு சவாலாக அமையும். பேட்டிங்கோ ஃபீல்டிங்கோ எந்தவொரு சூழலிலும் அவரது எனர்ஜி குறைந்ததே இல்லை என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.