ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கான கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.

சன்ரைசர்ஸ் அணி கேதர் ஜாதவ்(ரூ.2 கோடி), முஜீபுர் ரஹ்மான்(ரூ.1.5 கோடி) மற்றும் ஜெகதீஷா சுச்சித்(ரூ.30 லட்சம்) ஆகிய 3 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது. சில வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டியது; பின்னர் விட்டது.

அப்படி, சன்ரைசர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை எடுக்க நினைத்து முடியாமல் போனது என்பது குறித்து லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விவிஎஸ் லட்சுமணன், சில வீரர்களை எடுக்க நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எடுக்கமுடியாமல் போனது.

குறிப்பாக க்ளென் மேக்ஸ்வெல்லை எடுக்க நினைத்தோம். இந்திய வீரர் வேண்டும் என்று கேதர் ஜாதவையும், கிருஷ்ணப்பா கௌதமையும் எடுக்க முனைந்தோம். கேதர் ஜாதவை எடுத்துவிட்டோம். மேக்ஸ்வெல் மற்றும் கௌதமின் விலை எகிறியதால், அவ்வளவு பட்ஜெட் இல்லாததால் அவர்களை எடுக்க முடியவில்லை என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.