ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக அறியப்படும் நால்வரில்(கோலி-ஸ்மித்-வில்லியம்சன்-ரூட்), பேட்டிங் டெக்னிக், நம்பர், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கோலி தான் டாப் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது இரட்டை சதத்தை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் உலகளவில் 4வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். கோலியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. சில கேட்ச் வாய்ப்புகளை கொடுத்து, அதை எதிரணி தவறவிட்டு அதிர்ஷ்டத்தில் அடிக்கப்பட்ட இரட்டை சதம் கிடையாது இது. மிகத்தெளிவாக, பிசிறே இல்லாமல் அபாரமாக ஆடி அடிக்கப்பட்டது. 

கோலியின் மிகப்பெரிய பலமே, அவர் அதிகமாக காற்றில் தூக்கியடிக்கமாட்டார். பந்தை காற்றில் அடிக்காமல், களத்தில் ஃபீல்டர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி அதில் அழகாக ப்ளேஸ் செய்து பவுண்டரிகளாக விளாசி ரன்களை குவித்துவிடுவார். அதைத்தான் இந்த போட்டியிலும் செய்தார். அதுதான் கோலியின் வெற்றிக்கான தாரக மந்திரமாகவும் திகழ்கிறது. 

கோலி 7வது இரட்டை சதத்தை விளாசியதை அடுத்து பல முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணனும் கோலியை பாராட்டியுள்ளார். கோலியை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள லட்சுமணன், விராட் கோலியின் கால் நகர்த்தல்கள் மற்றும் ஷாட் செலக்‌ஷன் என்னை வியக்கவைக்கிறது. கோலியின் பேலன்ஸ், முன் நகர்ந்து ஆஃப் திசையில் அவர் அடிக்கும் ஷாட்டுகள் அபாரமானவை. அதேபோல ஃபீல்டிங்கில் இருக்கும் இடைவெளியை மிகத்துல்லியமாக உற்றுநோக்கி அந்த இடைவெளியில் அடிப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். கோலியின் இந்த திறமை, எதிரணி கேப்டன்களுக்கும் பவுலர்களுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார்.