ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை ஹைதராபாத்தில் நடக்கும் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. 

இதுவரை இரு அணிகளும் 3 முறை இறுதி போட்டியில் மோதியுள்ளன. அவற்றில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறை சிஎஸ்கேவுடன் மோதியுள்ளது. அந்த இரண்டிலுமே மும்பை இந்தியன்ஸ் அணிதான் வென்று கோப்பையை கைப்பற்றியது. 2010ம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையே நடந்த இறுதி போட்டியில் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது. 

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே மும்பை அணிதான் வென்றுள்ளது. மும்பை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதேநேரத்தில் சிஎஸ்கே அணியோ பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் அளவிற்கு பேட்டிங்கில் செயல்படவில்லை. இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகிய மூன்று ஸ்பின்னர்களும் மிரட்டுகின்றனர். அதனால்தான் சிஎஸ்கே அணி இந்த சீசனில் இறுதி போட்டிவரை வந்துள்ளது. 

ஆனால் பேட்டிங்கில் சிஎஸ்கே அணி மந்தமாகவே உள்ளது. ரெய்னா, ராயுடு ஆகியோர் சுத்தமாக ஃபார்மிலேயே இல்லை. இருவரும் இந்த சீசன் முழுவதுமே சொதப்பியுள்ளனர். வாட்சன் முக்கியமான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். இந்த சீசனில் இதுவரை பிராவோவிற்கு பேட்டிங் வாய்ப்பே பெரிதாக கிடைக்கவில்லை. அவர் மிகவும் பின்வரிசையில் இறக்கப்படுகிறார். சில சமயங்களில் ஜடேஜாவிற்கு பின்னர் இறக்கப்படுகிறார். 

பிராவோவை ஒருவேளை முன்னால் இறக்கினால் ரன்ரேட் உயர வாய்ப்பிருக்கிறது. பிராவோவை சிஎஸ்கே அணி மிகவும் பின்னால் இறக்காமல் சற்று முன்னால் இறக்கலாம் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

பிராவோ மாதிரியான எனர்ஜிடிக்கான வீரரை முன்வரிசையில் இறக்க வேண்டும் என்று தோனிக்கு விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.