சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால், ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கு வந்தால் கூட, எளிதாக பலருக்கும் பரவிவிடும் அபாயம் உள்ளது. எனவே ஐபிஎல்லை நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்துள்ளன. 

இதுகுறித்து விவாதிக்க, வரும் 14ம் தேதி(சனிக்கிழமை) ஐபிஎல் நிர்வாகக்குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தலைமையில் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருவதற்கான விசாவிற்கு ஏப்ரல் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல்லில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கண்டிப்பாக இந்தியாவிற்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள், அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர், 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல்லில் ஆட இந்தியாவிற்கு வருவதிலேயே சிக்கல் உள்ளது. 

Also Read - முன்னாள் சிஎஸ்கே ஆல்ரவுண்டரின் அதிரடியால் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அபார வெற்றி

எனவே ஐபிஎல் நடப்பது மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. வரும் 14ம் தேதி நடக்கும் ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின்னர் ஐபிஎல் நடப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.