குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லை கடுமையாக விளாசியுள்ளார் வீரேந்திர சேவாக். 

ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடிவந்த ஷுப்மன் கில்லை 15வது சீசனுக்கு முன்பாக அந்த அணி விடுவித்ததையடுத்து, அவரை ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் நேற்று மோதின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்த நிலையில், 159 ரன்கள் என்ற இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் முதல் ஓவரின் 3வது பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். துஷ்மந்தா சமீராவின் பந்தில் டக் அவுட்டானார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் பவர்ப்ளேயில் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்துவதில்லை, அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், அந்த விஷயத்தில் கடுமையாக உழைத்திருப்பதாகவும், சில Cheeky shotகளை கற்றிருப்பதாகவும் கில் தெரிவித்திருந்தார்.

லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் 3வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறிய ஷுப்மன் கில்லை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் வீரேந்திர சேவாக்.

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், ஷுப்மன் கில் நல்ல ஒருநாள் கிரிக்கெட் வீரர். டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் அதிக பவுண்டரிகளை அடிக்கும் வீரர்களே வெற்றிகரமாக திகழ்ந்திருக்கிறார்கள். அந்த விஷயத்தில் தான் கில் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும். அவர் சில Cheeky shotகளை கற்றிருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவரது பேட்டிங்கை பொறுத்தவரை அவர் cheeky shots எல்லாம் ஆட வேண்டாம். அவரது இயல்பான ஆட்டத்தை ஆடினாலே போதும்; நல்ல தொடக்கத்தை அமைத்து பெறமுடியும்.

கடந்த ஆண்டு அவரது ஸ்டிரைக் ரேட் 120. இது போதாது; அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று பேசியிருந்தோம். ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா ஆடியதை போன்று இயல்பாக ஆடினாலே அதை செய்யமுடியும். 60, 70, 80 ரன்களை கடந்தால் தான் ஸ்டிரைக் ரேட் அதிகமாகும். கில் 25-30 ரன்களிலேயே ஆட்டமிழந்துவிடுகிறார். சச்சின் டெண்டுல்கரோ, நானோ, கம்பீரோ தொடக்க வீரர்களாக cheeky shots எல்லாம் ஆடியதில்லை என்று சேவாக் கூறினார்.