மும்பை இந்தியன்ஸ் அணி பும்ராவின் ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னராக ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடவைக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் அதேவேளையில், பலமுறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன. 

மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கேகேஆருக்கு எதிரான போட்டியில் 15வது ஓவர் வரை ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மும்பை அணி. டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில் 35 ரன்களை விளாசி அதே ஓவரில் ஆட்டத்தை முடித்தார் கம்மின்ஸ்.

ஃபாஸ்ட் பவுலரை ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை அணி ஏலத்தில் எடுத்திருந்தாலும், அவர் அடுத்த சீசனில் தான் ஆடுவார். அதனால் பும்ராவிற்கு சரியான பவுலிங் பார்ட்னர் அமையவில்லை. டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ் ஆகிய இருவரும் சுமாராகத்தான் வீசுகின்றனர். டைமல் மில்ஸ் கூட நன்றாகத்தான் வீசுகிறார். ஆனால் டேனியல் சாம்ஸை நம்பியெல்லாம் ஆடமுடியாது. அதேபோல பாசில் தம்பியும் பெரிதாக சோபிக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் யூனிட் பலவீனமாக இருக்கும் நிலையில், அதில் ஒருசில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் வீரேந்திர சேவாக். பென்ச்சில் உட்காரவைத்துள்ள ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடவைக்கலாம் என்று சேவாக் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், மும்பை அணியின் பென்ச் வலிமையை பார்த்தால், அந்த அணி நிர்வாகம் வெளியே உட்காரவைத்தவர்களில் சிலரை ஆடவைப்பது குறித்து கண்டிப்பாக யோசித்தே ஆக வேண்டும் என்பதுதான் தெரிகிறது. மயன்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனாத்கத், மெரிடித், அர்ஷத் கான் ஆகிய வீரர்களை உட்காரவைத்திருக்கிறார்கள். சஞ்சய் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர், ஹ்ரிதிக் ஷோகீன் ஆகிய வீரர்களில் ஒருவர் கூட பாசில் தம்பி அல்லது டேனியல் சாம்ஸுக்கு பதிலாக ஆடலாம். பவர்ப்ளேயில் 3 ஓவர்கள் வீசுவதற்கு மும்பை அணியிடம் ஆள் இல்லை. மும்பை அணியின் பவுலிங் யூனிட் பலவீனமாக உள்ளது என்று சேவாக் கருத்து கூறியுள்ளார்.

இடது கை ஃபாஸ்ட் பவுலரான ஜெய்தேவ் உனாத்கத், ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர். ஒருகாலத்தில் பவுலிங்கில் பட்டைய கிளப்பிய அவருக்கு பெரும் கிராக்கி இருந்த நிலையில், இப்போது ஆடும் லெவனில் கூட இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். ஆனால் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாகவே பந்துவீசி வந்திருக்கிறார் உனாத்கத். எனவே அவரை பென்ச்சில் உட்காரவைக்காமல் பும்ராவின் பார்ட்னராக ஆடவைத்தால் மும்பை அணிக்கு நல்லது என்பது சேவாக்கின் கருத்து.