Asianet News TamilAsianet News Tamil

களத்தில் நடப்பது எங்களுக்குத்தான் தெரியும்.. வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது- சர்ச்சை சம்பவம் குறித்து கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் குறித்து போட்டிக்கு பின்னர் மௌனம் கலைத்துள்ளார் கோலி.
 

virat kohli speaks about drs controversy of third test of south africa vs india
Author
Cape Town, First Published Jan 14, 2022, 10:05 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் அடித்தன.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் சதத்தால் 198 ரன்கள் அடித்தது. மொத்தமாக இந்திய அணி 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 212 ரன்கள் என்ற இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸின் போது, தென்னாப்பிரிக்க கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கினார் எல்கர். கள நடுவர் எராஸ்மஸ் அதற்கு அவுட் கொடுத்தார். எல்கர் அதை ரிவியூ செய்தார். கிட்டத்தட்ட ஃபுல் லெந்த்தில் விழுந்த அந்த பந்து, பால் டிராக்கிங்கில் அதிக பவுன்ஸ் ஆகி ஸ்டம்ப்புக்கு மேல் செல்வதாக காட்டியது. அதனால் டீன் எல்கர் தப்பினார்.

அந்த பந்து அதிக பவுன்ஸ் ஆனதை இந்திய வீரர்களால் நம்ப முடியவில்லை. கள நடுவரே அதிர்ச்சிதான் அடைந்தார். அதனால் கடும் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்டம்ப் மைக்கிடம் சென்று, உங்கள் அணி(தென்னாப்பிரிக்கா) வீரர்களும் பந்தை சேதப்படுத்துகின்றனர். அதையும் கொஞ்சம் பாருங்கள். எதிரணி மீதே கவனம் செலுத்தாமல் இருபக்கமும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள் என்றார் கோலி.

இதையடுத்து, இந்திய அணியின் 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே செயல்படுவதாக கேஎல் ராகுல் கூறினார். அதற்கு, “கேமராமேன்களும் தான்” என கோலி கூறினார்.

கோலியின் இந்த செயலால் அதிருப்தியடைந்த முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை மிகக்கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், போட்டிக்கு பின்னர் அந்த சம்பவம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அதைப்பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. களத்தில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத்தான் தெரியும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரியாது. உண்மையாகவே சொல்கிறேன்.. அந்த சம்பவத்தை பற்றி பேசி சர்ச்சையை உண்டாக்க நான் விரும்பவில்லை. அது போட்டியின் ஒரு முமெண்ட்; அது முடிந்துவிட்டது. அதைக்கடந்து வந்துவிட்டோம் என்றார் கோலி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios