உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. மான்செஸ்டரில் நடந்த போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் 92 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் ஜடேஜா தனி நபராக போராட, அவருக்கு தோனி ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முழு பொறுப்பும் தோனி மீது இறங்கியது. தோனி அதிரடியாக ஆடி வெற்றிகரமாக முடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

இதையடுத்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணி தோற்றது. இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. தோனி உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று உலக கோப்பைக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் தோனி தனது ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் அவர் டெஸ்ட் போட்டியில் திடீரென ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியில் இருந்தும் திடீரென தான் விலகினார். எனவே அதேபோல செய்தாலும் செய்வார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை தனது ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை. உலக கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிவிட்ட நிலையில், தோனியின் ஓய்வு குறித்து கேப்டன் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேப்டன் கோலி, தோனி அவரது ஓய்வு குறித்து இதுவரை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என்றார். 

எனவே தோனி, இந்திய அணி அடுத்ததாக ஆடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இருப்பார்.