கொரோனா ஊரடங்கால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் சும்மா இருப்பதில்லை. தொடர் உடற்பயிற்சிகளின் மூலம் ஃபிட்னெஸை பராமரித்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கெவின் பீட்டர்சன், சுனில் சேத்ரி ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடினார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இயங்கிவருகிறார் கோலி. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கோலிக்கு முடிவெட்டும் வீடியோ வெளியாகி வைரலானது. அதையடுத்து, கோலியும் அனுஷ்கா சர்மாவும் வீட்டில் கிரிக்கெட் ஆடும் வீடியோ, கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஆகியவையும் வைரலாகின.

இந்நிலையில், தற்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி, நமக்கிடையேயான உரையாடல்கள் அருமையானவை. நான் அதை எப்போதுமே அதிகமாக நேசிக்கிறேன். சிறந்த மனிதர் என்று வில்லியம்சனை புகழ்ந்துள்ளார். 

இருவரும் அந்த புகைப்படத்தில் ப்ளேசர் அணிந்துள்ளனர். எனவே இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளில், ஏதோ ஒரு போட்டியில் டாஸ் போட செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது என்பது தெரிகிறது.

விராட் கோலி - வில்லியம்சன் இருவரும் சிறந்த நண்பர்கள். 2008 அண்டர் 19 உலக கோப்பையில், அவரவர் அணிக்கு இவர்கள் தான் கேப்டன். அப்போதிலிருந்தே நட்பை தொடர்ந்து வருகின்றனர். எப்போதுமே வில்லியம்சனுக்கு ஆதரவாக பேசும் விராட் கோலி, வில்லியம்சனின் வித்தியாசமான மற்றும் சிறப்பான பேட்டிங்கை 2008லேயே தான் பார்த்து வியந்திருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அதேபோலவே, வில்லியம்சனின் கேப்டன்சி மீது விமர்சனம் எழுந்தபோது, வெற்றி விகிதங்களை வைத்து மட்டுமே கேப்டன்சி திறனை மதிப்பிட முடியாது என்று வில்லியம்சனுக்கு ஆதரவாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

வில்லியம்சன், எல்லை கடந்து சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். 2019 உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோற்காதபோதும் உலக கோப்பையை இழந்து நின்றபோதும்கூட, வருத்தத்தை மறைத்து சிரித்த அவரது பண்பும், அவரது அருமையான கேப்டன்சியும் மனவலிமையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. யாராலும் வெறுக்கப்படாத ஒரு வீரர் வில்லியம்சன் என்பதில் சந்தேகமில்லை.