இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். அகர்வாலுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் இணைந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்தது. கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தை கோலியும் ரஹானேவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து தங்களது அனுபவத்தை பயன்படுத்தி, ரபாடா, நோர்ட்ஜே ஆகிய இருவரின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். ரஹானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்த கோலி, சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடினார்.

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 356 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் கோலி அடித்து ஆடி விரைவாக ரன்களை குவித்தார். மெதுவாக தொடங்கிய ஜடேஜாவும் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்தார். டி பிரேக் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் அடித்திருந்தது. 

டி பிரேக் முடிந்து களத்திற்கு வந்த விராட் கோலி, இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 7வது இரட்டை சதம். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தலா 6 இரட்டை சதங்களுடன் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் முதலிடத்தில் இருந்தனர். அவர்களின் சாதனையை முறியடித்து அதிக இரட்டை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 

அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காமிடத்தை ஜெயவர்தனே மற்றும் வேலி ஹாமெண்ட் ஆகிய இருவருடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் டான் பிராட்மேன்(12 இரட்டை சதங்கள்) முதலிடத்திலும் சங்கக்கரா(11 இரட்டை சதங்கள்) இரண்டாமிடத்திலும் பிரயன் லாரா(9 இரட்டை சதங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளனர். நான்காமிடத்தில் ஜெயவர்தனே, ஹாமெண்ட் மற்றும் கோலி உள்ளனர்.