இந்திய அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். முன்னாள் ஜாம்பவான்களின் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் தரமான வீரராக திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை குவித்துவரும் கோலி, ஏதாவது போட்டியில் ஏதாவது ஒரு சாதனையை முறியடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். அந்தளவிற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையையாவது முறியடித்துவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமே அடிக்காமல் இருந்தார். அதற்கெல்லாம் சேர்த்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான நேரத்தில் களத்திற்கு வந்த கோலி, மயன்க் அகர்வால், ரஹானே, ஜடேஜா ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினார். அதிலும் ரஹானே மற்றும் ஜடேஜா உடனான அவரது பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பியது. 

ரஹானேவுடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 178 ரன்களையும் ஜடேஜாவுடன் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 225 ரன்களையும் கோலி குவித்தார். இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்புகள் தான் மிக முக்கியமானவையாக அமைந்தது. அபாரமாக ஆடிய கோலி இரட்டை சதம் விளாசியதோடு, அதற்கு பிறகு 54 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தமாக 254 ரன்களை குவித்தார். தனது 7வது இரட்டை சதத்தை விளாசிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்களை விளாசிய இந்திய வீரர் மற்றும் உலகளவில் நான்காவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

இந்திய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து ஆட்டநாயகன் விருதையும் கோலியே வென்றார். 

இந்நிலையில், இரட்டை சதம் விளாசியது குறித்து பேசிய விராட் கோலி, இந்த இன்னிங்ஸில் எப்படியாவது இரட்டை சதமடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு களத்திற்கு சென்றால், இரட்டை சதமடிக்க முடியாது. ஆனால் ஐந்து செசன்கள் பேட்டிங் ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் களத்திற்கு சென்றால், இரட்டை சதம் தானாகவே வந்துவிடும் என்று கோலி தெரிவித்துள்ளார்.