இரு அணிகளுமே முதன்முறையாக பிங்க் பந்தில் ஆடின. பிங்க் பந்தின் தன்மை எப்படி இருக்கப்போகிறது? இந்திய ஆடுகளங்களில் பிங்க் பந்து செயல்பாடுகள் ஆகியவை குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. பிங்க் பந்தின் சீம் சிவப்பு பந்தை விட அதிகமாக இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதுமட்டுமல்லாமல் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் இருந்தது. 

இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தலையிலும் உடம்பிலும் பயங்கரமாக அடி வாங்கியதோடு சரியாக பேட்டிங் ஆடமுடியாமல் திணறினர். முஷ்ஃபிகுர் ரஹீம் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். ஆனால் இந்திய வீரர்கள் தடுமாறவே இல்லை. மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். ரன் மெஷின் விராட் கோலி, இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தினார். 

அந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த கோலி, 136 ரன்களை குவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவரும் விராட் கோலி, வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்தார். 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் அறிவுரை பிங்க் பந்தை எதிர்கொண்டு ஆட தனக்கு எந்த வகையில் உதவியது என்பதை போட்டிக்கு பின்னர் தெரிவித்தார் விராட் கோலி. இதுகுறித்து பேசிய விராட் கோலி, பேட்டிங் ஆடுவதற்கு முன் சச்சின் டெண்டுல்கருடன் பேசினேன். அப்போது அவர் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறினார். மிகவும் சுவாரஸ்யமான விஷயம் அது. அதாவது, பிங்க் பந்தை பொறுத்தமட்டில், இரண்டாவது செசனை, வழக்கமான டெஸ்ட்டின் முதல் செசனை போல கருதி ஆட வேண்டும். ஏனெனில் நேரம் ஆக ஆகத்தான் பந்து ஸ்விங் ஆகும் என்று சச்சின் கூறியதாகவும் அதேபோலத்தான் இருந்ததாகவும் அதற்கேற்ப ஆடியதாகவும் கோலி தெரிவித்தார்.