ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த ஸ்கூப் ஷாட்டை வியந்து பார்த்தார் கோலி.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக கோலி திகழ்ந்தாலும், அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள்தான். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனல் கோலி அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகிறார். 

நம்பரின் அடிப்படையில் கோலி முன்னிலையில் இருந்தாலும், திறமையின் அடிப்படையில் இருவரில் யார் சிறந்தவர் என்று கூறுவது கடினம். ரோஹித் சர்மாவும் அபாரமான பேட்ஸ்மேன். அசாத்தியமான ஷாட்டுகளை அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக அடிப்பவர் ரோஹித்.

ரோஹித் - கோலி இடையே பனிப்போர் நடந்துவருவதாக ஒரு பேச்சு உள்ளது. அவர்கள் இருவரும் களத்தில் பெரிதாக பேசிக்கொள்வதேயில்லை. ஆனால் பேட்டிங் ஆடும்போது இருவருக்கும் இடையேயான புரிதல் சிறப்பாக இருக்கும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 237 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலக்கை விரட்டும்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பேட்டிங் ஆடியபோது பெஹ்ரெண்டோர்ஃப் வீசிய 9வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு ஸ்கூப் ஷாட் ஆடினார். ரிஸ்க்கான அந்த ஷாட்டை சரியாக ஆடி பவுண்டரி அடித்தார் ரோஹித். அந்த ஷாட்டை பார்த்து சிரித்தார் கோலி. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். செம ஷாட் என்கிற ரீதியில் கோலி சிரிக்க, ரோஹித்தும் பதிலுக்கு சிரிப்பை உதிர்த்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

முதல் டி20 போட்டியில் இதேபோல ஸ்கூப் ஷாட் ஆட நினைத்துத்தான் பெஹ்ரெண்டோர்ஃபிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா. ஆனால் இந்த முறை அதுமாதிரி நடக்கவில்லை.