விறுவிறுப்பாக நடந்துவரும் உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி நடந்தது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். 

தவான் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களமிறங்க, விஜய் சங்கர் நான்காம் வரிசைக்காக அணியில் எடுக்கப்பட்டார். உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் விஜய் சங்கர். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல சிறப்பாக ஆடினர். டாப் 3-ல் ஒருவர் சிறப்பாக ஆடினாலே இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். இந்த போட்டியில் டாப் ஆர்டர் மூன்று பேருமே சிறப்பாக ஆடினர். ரோஹித் சர்மாவின் அதிரடி சதம், ராகுல் மற்றும் கோலியின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் 336 ரன்களை குவித்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் எதிர்பார்த்திராத சம்பவம் என்றால் அது, விஜய் சங்கர் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியதுதான். பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தனது 3வது ஓவரை வீசும்போது, புவனேஷ்வர் குமாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் பெவிலியன் திரும்ப, அந்த ஓவரின் எஞ்சிய 2 பந்துகளை வீசுவதற்காக விஜய் சங்கரை அழைத்தார் கேப்டன் கோலி. தான் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் விஜய் சங்கர். எஞ்சிய 2 பந்துகளை ஓவரை முடிப்பதற்காக விஜய் சங்கரிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. ஆனால் விஜய் சங்கரோ யாருமே எதிர்பார்த்திராத விதமாக முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்குமே விக்கெட் விழாத நிலையில், புவனேஷ் காயத்தால் வெளியேறியதால் அவரது ஓவரின் எஞ்சிய 2 பந்துகளை வீசவந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது கேப்டன் விராட் கோலி உட்பட அனைவரையுமே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

விஜய் சங்கர் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியதும், உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்த கேப்டன் கோலி ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். அது செம வைரலாகவருகிறது. விராட் கோலி உற்சாகம், மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி, கோபம், அதிருப்தி என அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் களத்தில் கொட்டித்தள்ளிவிடுவார். 

அந்தவகையில், விஜய் சங்கரின் விக்கெட் வீழ்த்தியதை அடுத்து இன்ப அதிர்ச்சியை ஒரு ரியாக்‌ஷனில் வெளிப்படுத்தினார். ”2 பந்தை போடுப்பானு பந்தை கொடுத்தா, விக்கெட்டே போட்டான்ப்பா இவன்” என்பதை வெளிப்படுத்துவது போல் இருந்தது அந்த ரியாக்‌ஷன்.