கேப்டன் கோலியின் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் நம்பரின் அடிப்படையில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கோலி திகழ்கிறார். 2014ம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதும், டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. 

விராட் கோலி கேப்டன்சியில் இந்த 5 ஆண்டுகளில் இதுவரை இந்திய அணி, 49 போட்டிகளில் ஆடி 29 வெற்றிகளை குவித்துள்ளது. கங்குலி, தோனியை விட அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக திகழும் கோலி, 50வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி செல்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கி நடந்துவரும் டெஸ்ட் போட்டி, விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் 50வது டெஸ்ட் போட்டி. இதன்மூலம் தோனிக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அரைசதம் அடித்துள்ளார் கோலி. தோனிக்கு அடுத்தபடியாக அதிகமான டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். தோனி மொத்தமாக 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். விராட் கோலி, தோனியின் இந்த சாதனையை விரைவில் முறியடித்துள்ளார். இன்னும் 11 போட்டிகளில் கோலி கேப்டன்சி செய்தால் தோனியின் சாதனை முறியடிக்கப்படும். 

கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 50வது டெஸ்ட் போட்டியை வழிநடத்தும் கோலி, கங்குலியை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.