தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் கோலி. களத்தில் செட்டில் ஆகியிருந்த விராட் கோலியை க்ளீன் போல்டாக்கி மிரட்டினார் எம்பல்டேனியா
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. அதுமட்டுமல்லாது விராட் கோலியின் 100வது சர்வதேச போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஜடேஜா, அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகிய 3 ஸ்பின்னர்கள் மற்றும் பும்ரா, ஷமி ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணிக்கு நேர்மாறாக இலங்கை அணி காம்பினேஷன் உள்ளது. இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் ஆடும் நிலையில், இலங்கை அணி ஒரேயொரு ஸ்பின்னருடன் ஆடிவருகிறது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.
இலங்கை அணி:
திமுத் கருணரத்னே (கேப்டன்), லஹிரு திரிமன்னே, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சுரங்கா லக்மல், விஷ்வா ஃபெர்னாண்டோ, லசித் எம்பல்டேனியா, லஹிரு குமாரா.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 10 ஓவரில் 52 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ரோஹித் சர்மா, 28 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்த நிலையில் 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலும் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
3ம் வரிசையில் ஹனுமா விஹாரி இறங்கினார். 2 விக்கெட் விழுந்தபிறகு, விராட் கோலி களத்திற்கு வந்தார். விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பதால், 2 ஆண்டுகளாக சதத்தின் தேடலில் இருக்கும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப கோலியும் நல்லவிதமாக தொடங்கினார். ஹனுமா விஹாரியும் கோலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 90 ரன்களை சேர்த்தனர்.
38 ரன்கள் அடித்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் கோலி. களத்தில் செட்டில் ஆகியிருந்த கோலி, பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 45 ரன்கள் அடித்திருந்தபோது, அபாரமான பந்தை வீசி கோலியை க்ளீன் போல்டாக்கினார் இலங்கை இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியா.
இடது கை ஸ்பின்னரான எம்பல்டேனியா வீசிய பந்து மிடில்ஸ்டம்ப்பில் பிட்ச் ஆகி திரும்பி, விராட் கோலியின் பேட்டில் படாமல் ஏமாற்றிச்சென்று ஆஃப் ஸ்டம்ப்பின் விளிம்பில் தட்டியது. க்ளீன் போல்டான விராட் கோலி, அந்த பந்தை நினைத்து சில நொடிகள் க்ரீஸில் வியந்து நின்றார். களத்தில் செட்டில் ஆன கோலியை இப்படி வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. 45 ரன்னில் நடையை கட்டிய கோலி அரைசதத்தை 5 ரன்னில் தவறவிட்டார்.
அரைசதம் அடித்த ஹனுமா விஹாரியும் 58 ரன்னில் ஆட்டமிழக்க, 175 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 5வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்துள்ளது.
