உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி தொடரைவிட்டு வெளியேறியது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, லீக் சுற்றில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது. லீக் சுற்றில் இங்கிலாந்தை தவிர அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டுமே மழையால் தடைபட்டது.

லீக் சுற்றில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்த இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித், கோலி, ராகுல் ஆகிய மூவருமே தலா ஒரு ரன்னில் வெளியேறினர். 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியின் மிடில் ஆர்டர்கள் மீண்டும் சொதப்பினர். 

தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேற, அதன்பின்னர் ஓரளவிற்கு நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் தலா 32 ரன்களில் ஆட்டமிழக்க, 92 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஜடேஜா தனி நபராக கடுமையாக போராடினார். ஆனால் ஒருமுனையில் தோனி மந்தமாக ஆடியதால், ஜடேஜா மீதான அழுத்தம் அதிகரித்தது. பெரிய ஷாட் அடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ஜடேஜா, 48வது ஓவரில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த தோல்வியை அடுத்து தொடரை விட்டு இந்திய அணி வெளியேறியது. நியூசிலாந்து அணி இறுதி போட்டி முன்னேறியது. போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டோம். அடிக்கக்கூடிய ஸ்கோருக்கு நியூசிலாந்தை சுருட்டிவிட்டோம். ஆனால் அவர்கள் முதல் அரை மணி நேரம் பந்துவீசிய விதம் அபாரமானது. தொடர் முழுக்க சிறப்பாக ஆடிவிட்டு 45 நிமிடம் மட்டும் சரியாக ஆடாததால் தொடரை விட்டு வெளியேறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு நியூசிலாந்து அணி தகுதியானது. அவர்கள் அபாரமாக ஆடினார்கள். சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர் என்று விராட் கோலி தெரிவித்தார்.